×

கொரோனா காலத்தில் வெற்று அரசியல் வேண்டாம்: ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் பதிலடி

டெல்லி: கொரோனா காலத்தில் வெற்று அரசியல் சரியானது அல்ல என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது 34 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனினும் சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்து இருந்தார். ஜூலை வந்து விட்டது, தடுப்பூசி வரவில்லை, எங்கே தடுப்பூசி’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் ஏற்கெனவே தகவல்களை வெளியிட்டு இருந்தேன். ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்சனை? அவர் அந்த தரவுகளை பார்க்கவில்லையா? ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜூலை மாதம் 12 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும். தனியார் மருத்துவமனைகளுக்கு தனியாக விநியோகம் செய்யப்படும். தடுப்பூசி குறித்து 15 நாட்களுக்கு முன்னரே மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் நாடே போராடிக் கொண்டிருக்கிறது. தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்த தருணத்தில் வெற்று அரசியல் சரியானது அல்ல என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.



Tags : Beush Goel ,Rahul Gandhi , corona
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...